search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் விவகாரம்"

    ரபேல் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்து வரும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இன்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #WinterSession #BJPRuckus
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது. இன்றும் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி விவகாரம், பணமதிப்பு நீக்க விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் இன்று மீண்டும் நோட்டீஸ் கொடுத்தார்.  இதேபோல் ரபேல் விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி சுனில் குமார் ஜக்கார் மக்களவையில் மீண்டும் நோட்டீஸ் கொடுத்தார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது, மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும்படி காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

    மேலும் ரபேல் விவகாரத்தில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர்.

    ரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து பாஜக எம்பிக்கள் இந்த விவகாரத்தை எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. #RafaleDeal #WinterSession #BJPRuckus
    ரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை காலை 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. #RafaleDeal #RafaleCase #SupremeCourt
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. ரபேல் போர் விமானங்களுக்கு விலை நிர்ணயம் செய்ததில் தொடங்கி, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது வரை ஊழல் நடந்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார். 

    ரபேல் ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி உள்ளிட்டோர் பொதுநல வழக்குகள் தொடர்ந்தனர்.



    இந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை  தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ரபேல் விலை விவரங்கள் அதில் இடம்பெறவில்லை.

    இதற்கிடையே, இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பிலும் காரசாரமாக நடந்த வாதம் நிறைவடைந்ததையடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

    இந்நிலையில், ரபேல் விவகாரத்தில் விசாரணை கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நாளை காலை 10 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. #RafaleDeal #RafaleCaseVerdict #SupremeCourt
    சிபிஐ அதிகாரிகள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட விவகாரத்தில், பிரதமரின் ஊழல் நிறுத்தப்படும் வரையில், மக்களும், எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.#RahulGandhi #PMModi #Rafale #CBI #Congress #BJP
    புதுடெல்லி:

    சிபிஐ இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனருக்கு இடையேயான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எடுத்த முடிவாய், இருவருக்கும் தற்காலிக விடுப்பு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், பொறுப்பு இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமனம் செய்தது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ரபேல் விவகாரத்தில் பிரதமரின் ஊழல் தொடர்பான ஆதாரங்களை அழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாட்டின் பல்வேறு இடங்களில் சிபிஐ அலுவலகங்களை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.



    இந்நிலையில், இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ஊழலுக்கு எதிராகவும், ரபேல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க தடுப்பதை எதிர்த்தும், அநீதிக்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குரல் கொடுக்க ஒன்றிணைந்துள்ளதாகவும், நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், பிரதமரின் ஊழல்கள் நிறுத்தப்படும் வரையில் எதிர்க்கட்சிகளும், மக்களும் காங்கிரஸ் உடன் இணைந்து போராட வேண்டும் எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi #Rafale #CBI #Congress #BJP
    ரபேல் போர் விமான கொள்முதலில் ஏற்பட்ட ஊழலுக்கான ஆதாரங்களை அழிக்கவே சிபிஐ அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #CBI #AlokVerma #NageswaraRao #CBIVsCBI #PMModi #RafaleDeal
    புதுடெல்லி:

    மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.

    சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன. 



    இந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியார்களிடம் கூறியதாவது:-

    ‘சிபிஐ இயக்குனர் நியமனம் மற்றும் நீக்கம் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட மூவர் குழுவால் மட்டுமே மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை. ஆனால் சிபிஐ இயக்குனர் நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

    இது சிபிஐ அதிகாரிகளை நீக்கம் செய்தது நாட்டு மக்களை அவமதிக்கும் செயல்.  ரபேல் விவகாரத்தை நீர்த்துப்போகவே முயற்சி நடந்துள்ளது. ஆதாரத்தை அழிக்க அரசு முயல்கிறது. பிரதமர் பீதியில் காணப்படுகிறார். அவர் ஊழலில் ஈடுப்பட்டு பிடிபட்டுவிட்டோம் என்று பயப்படுகிறார்.’

    இவ்வாறு அவர் கூறினார். #RahulGandhi #CBI #AlokVerma #NageswaraRao #CBIVsCBI #PMModi #RafaleDeal
    ‘ரபேல்’ போர் விமான விவகாரத்தில், நாடு முழுவதும் சுற்றி வந்து காங்கிரசின் பொய் பிரசாரத்தை முறியடிப்போம் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். #RafaleRow #NirmalaSitharaman #Congress
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து ‘ரபேல்’ போர் விமானங்கள் வாங்கும் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

    இந்நிலையில், இதுகுறித்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் போர் விமான விவகாரத்தில், காங்கிரஸ் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், காங்கிரசின் அடிப்படையற்ற, பொய் பிரசாரம் தொடர்ந்து வருகிறது. இதை எதிர்கொள்வதை தவிர, வேறு வழி இல்லை.



    அந்த பிரசாரத்தை முறியடிப்போம். நாடு முழுவதும் சுற்றி வந்து உண்மையை சொல்வோம்.

    காங்கிரஸ் கட்சியில் விரக்தி நிலவுகிறது. ஒவ்வொரு பிரச்சினையிலும் அரசு எவ்வித களங்கமும் இல்லாமல் இருப்பதை ஒரு பொருட்டாகவே கருதாமல், பொய் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது.

    இந்த விவகாரத்தில், சர்வதேச பரிமாணத்தையும் நாங்கள் பார்க்கிறோம்.

    கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இன்னும் 2 வாரங்களில், ரபேல் விவகாரத்தில் பெரிய குண்டு வெடிக்கும்” என்று ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். அதேபோல், பிரான்ஸ் முன்னாள் அதிபர், சர்ச்சைக்குரிய கருத்தை கூறியுள்ளார்.

    இது, தற்செயலாக நடந்ததாக கருத முடியாது. காங்கிரஸ் கட்சி எப்படி இதை முன்கூட்டியே கணித்தது? முன்பு ஒருமுறை, காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு சென்று, பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தானின் உதவியை கேட்டது, நினைவுக்கு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #RafaleRow #NirmalaSitharaman #Congress 
    ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அருண் ஜெட்லியின் விளக்கத்திற்கு முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். #RafealDeal #ArunJaitley #PChidambaram
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டி இந்திய அரசியலில் புயலை கிளப்பியது. ஆனால், விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனமோ, தங்களுக்கு தேவையான நிறுவனத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம் என விளக்கம் அளித்திருந்தது.



    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். ரபேல் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், இது பற்றி பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். ஆனால், ராகுல் காந்தி மற்றும் சில கட்சிகள் குற்றம் சாட்டுவதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றும் ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும் என்றும் நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    இந்நிலையில், ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நிதி மந்திரிக்கு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

    ‘உண்மைக்கு இரண்டு முகங்கள் இருக்க முடியாது என்கிறார் நிதி அமைச்சர் ஜெட்லி. முற்றிலும் சரி. எந்த முகம் உண்மை முகம் என்று எப்படி கண்டு பிடிப்பது? இரண்டு வழிகள் தாம் இருக்கின்றன. ஒன்று, விசாரணைக்கு உத்தரவிடுவது. இரண்டு, நாணயத்தைச் சுண்டி பூவா, தலையா என்று பார்ப்பது. நிதி அமைச்சர் இரண்டாவது வழியை விரும்புகிறாரோ?. ரபேல் விமான உடன்பாட்டில் தவறு நடந்திருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டு பிடிப்பதற்கு விசாரணையைத் தவிர வேறு வழியில்லை’ என ப.சிதம்பரம் கூறியுள்ளார். #RafealDeal #ArunJaitley #PChidambaram
    ரபேல் போர் விமான விவகார சர்ச்சையில், பிரதமரின் பொய்களை மறைக்க மத்திய மந்திரிகள் போட்டி போடுவதாக காங்கிரஸ் கட்சி கூறியது. #Rafale #Congress #AnandSharma #Modi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா, நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் போர் விமான பேரத்தில், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்.ஏ.எல்.) இந்தியாவில் 108 போர் விமானங்களை தயாரிப்பதாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பேசப்பட்டது.

    ஆனால், பா.ஜனதா ஆட்சியில், எச்.ஏ.எல்.-ஐ விலக்கி விட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியை சேர்த்துள்ளனர். பிரான்ஸ் அரசோ அல்லது விமானம் தயாரிக்கும் டசால்ட் ஏவியேசன் நிறுவனமோ, எச்.ஏ.எல்.-ஐ ஒதுக்கச் சொன்னார்களா?



    யாருக்குமே தெரியாமல், இந்த மாற்றத்தை செய்துள்ளனர். இந்திய விமானப்படையையோ, ராணுவ மந்திரியையோ கலந்து பேசாமல், பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளார். தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்பதைக்கூட அருண் ஜெட்லியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

    கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி, பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். அதற்கு முன்பு, மார்ச் 28-ந் தேதிதான், அனில் அம்பானியின் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.

    மேலும், விமானத்தின் விலையையும் ஒரு விமானத்துக்கு ரூ.1,670 கோடியாக உயர்த்தி உள்ளனர். இவற்றுக்கெல்லாம் பிரதமர் பதில் சொல்ல வேண்டும். ராணுவ மந்திரியோ, நிதி மந்திரியோ சொல்லத் தேவையில்லை. பிரதமரின் பொய்கள் அம்பலமாகி விட்டதால்தான் அவர் மவுனம் காக்கிறார். அவர் தப்ப முடியாது.

    நூற்றாண்டு கால மிகப்பெரிய ஊழல், ரபேல் போர் விமான ஊழல் ஆகும். இந்த ஊழலை மூடி மறைக்க முயன்றவர்களின் முகமூடி கிழிக்கப்படும்.

    பிரதமரின் பொய்களை மூடி மறைப்பதற்காக, எச்.ஏ.எல். நிறுவனம் போர் விமானம் தயாரிக்கும் திறனை பெற்றிருக்கவில்லை என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இதன்மூலம் பொதுத்துறை நிறுவனத்தை இழிவுபடுத்தி விட்டார். இந்த விமானங்களை தயாரிக்கும் திறன் பெற்ற ஒரே நிறுவனம், எச்.ஏ.எல். மட்டுமே.

    இந்த விவகாரத்தில், அவர் மட்டுமின்றி, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் பிரதமரின் பொய்களை மறைக்க ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்கள். திரும்பத்திரும்ப பொய் சொல்கிறார்கள். இது, இந்த அரசின் இயல்பை காட்டுகிறது.

    இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார். #Rafale #Congress #AnandSharma #Modi

     
    ரபேல் விவகாரத்தில் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு (ஜேபிசி) உத்தரவிடுங்கள் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #RafaleDeal #Modi #RahulGandhi
    புதுடெல்லி:

    பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

    இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. 

    இந்திய அரசால் கைகாட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவுசெய்ய எதுவுமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.  



    இந்நிலையில், ரபேல் போர் விமானம் விவகாரத்தில் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு (ஜேபிசி) உத்தரவிடுங்கள் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ஆதரிக்க இயலாதவற்றை ஆதரிப்பதற்காக போலியான நேர்மையுடன் பொய்களை அள்ளி வீசுவதுதான், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் சிறப்பும், திறமையும். ஆனால், பிரதமரும், நிதி மந்திரியும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, ரபேல் விவகாரத்தில் முழு உண்மையும் வெளிவர நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார். #RafaleDeal #Modi #RahulGandhi
    ரபேல் விவகாரம் குறித்து விவாதிக்க்க பாராளுமன்றத்தில் சிறப்பு அமர்வை கூட்ட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #RafaleDeal #Modi #ArvindKejriwal
    புதுடெல்லி:

    பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.

    இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. 

    இந்திய அரசால் கைகாட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவுசெய்ய எதுவுமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



    இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.  

    இந்நிலையில், ரபேல் விவகாரம் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு அமர்வை கூட்ட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ரபேல் விவகாரத்தில் உண்மை நிலை குறித்து அறிய பிரதமர் மொடி பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். #RafaleDeal #Modi #ArvindKejriwal
    ரபேல் விவகாரத்தில் பரிசுத்தத்தன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா வலியுறுத்தியுள்ளார். #RafaleDeal #Modi #ShatrughanSinha
    பாட்னா:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.
     
    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்த்தை மாற்றி அமைத்து கடந்த 2015-ம் ஆண்டில் பாரதிய ஜனதா ஆட்சியில் புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்படும் போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை இந்திய அரசுக்கு சொந்தமான எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு வழங்காமல் விமானத்துறையில் முன் அனுபவம் இல்லாத அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

    மேலும், அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. 



    இதற்கிடையே, ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்தத்தால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே நேற்று குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், பீகாரை சேர்ந்த பாஜக எம்.பி சத்ருகன் சின்ஹா, ரபேல் விவகாரத்தில் பரிசுத்தத்தன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், ரபேல் பேரம் விவகாரம் தொடர்பான பிரச்னையில் உண்மை நிலையை மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். அதன்மூலம் ரபேல் போர் விமானத்தின் விலை மூன்று மடங்கு கூடுதலாக வாங்கப்பட்டது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் இருந்து நீங்கள் (பிரதமர் மோடி) வெளிவருவதற்கு நீண்ட நாள்களாகும்.

    மக்கள் என்னை புரட்சிகரமான எம்.பி. என அழைக்கிறார்கள். ஆனால், நான் கட்சி மற்றும் நாட்டின் நலனுக்காகவே பேசி வருகிறேன்.

    எனவே, ரபேல் விவகாரத்தில் பரிசுத்தத்தன்மையை மத்திய அரசு நிரூபிக்க வேண்டும். இந்த விவகாரத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்ள நாடு ஆவலாக இருக்கிறது என வலியுறுத்தியுள்ளார். #RafaleDeal #Modi #ShatrughanSinha
    ×